கோலாலம்பூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- மொத்த வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தக உபரி அனைத்தும் இம்மாதத்தில், இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர மதிப்பை எட்டியதைத் தொடர்ந்து மிக வலுவான ஜனவரி மாத வர்த்தக செயல்திறனுடன் மலேசியா 2026-ஆம் ஆண்டை தொடங்கியிருக்கின்றது.
தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஏற்றுமதி வளர்ச்சி பதிவானதைத் தொடர்ந்து, வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு 12.6 விழுக்காடு உயர்ந்து, 27-ஆயிரத்து 237 கோடி ரிங்கிட்டை எட்டியதாக முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 19.6 விழுக்காடு உயர்ந்து 14,687 கோடி ரிங்கிட்டாகவும், இறக்குமதி 5.3 விழுக்காடு அதிகரித்து 12,550 கோடி ரிங்கிட்டாகவும் உயர்ந்துள்ளதாக MITI கூறியது.
2020-ஆம் ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து 69-வது மாதமாக வர்த்தக உபரி அதிகப்படியாக விரிவடைந்து, மொத்தம் 2,137 கோடி ரிங்கிட்டாக பதிவாகியுள்ளது.
வலுவான ஏற்றுமதி செயல்திறன் பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களால், குறிப்பாக மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்களால் உந்தப்பட்டது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது, 39.5 விழுக்காடு அல்லது ஏறத்தாழ 2,000 கோடி டிங்கிட் அதிகரித்துள்ளதாக அமைச்சு விவரித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)