கோலாலம்பூர், 21 பிப்ரவரி (பெர்னாமா) -- அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி தாக்கங்களை மலேசியா மதிப்பாய்வு செய்து வருகிறது.
பிப்ரவரி 20ஆம் தேதி விதிக்கப்பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை புத்ராஜெயா கவனத்தில் கொள்வதோடு, அமெரிக்காவில் அண்மைய சட்ட மற்றும் கொள்கை முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்து வருவதாகவும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.
மலேசியா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம், ஏ.ஆர்.டி-இல் கையெழுத்திட்டுள்ளது.
ஆனால், இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை என்று கூறிய ஜொஹாரி, ஒருதலைப்பட்ச வரிகள் உட்பட இதர வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாஷிங்டன் பிற சட்டப்பூர்வ வழிகளைத் பின்பற்றுவதாகவும் கூறினார்.
தற்காலிகமாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் அறிவிப்பை சுட்டிக்காட்டிய ஜொஹாரி, மலேசியா அதன் நோக்கம் மற்றும் சாத்தியமான தாக்கத்தை ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.
இந்நிலையில், திறந்த மற்றும் விதிகள் சார்ந்த வர்த்தகத்திற்கான மலேசியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதோடு, நாடு முழுவதும் ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)