சிறப்புச் செய்தி

வாகன ஓட்டுநர்கள் சாலைகளில் தங்களுக்கான பொறுப்புகளை பின்பற்ற வேண்டும் - குழந்தையன்

24/02/2026 07:27 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 24 (பெர்னாமா) -- நாட்டில் கடந்த ஆண்டு 649 806 சாலை விபத்துகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவற்றை உட்படுத்தி 6537 மரணங்கள் பதிவாகி இருப்பதை, புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

இந்த எண்ணிக்கைகள் அதிகரிப்பதை தவிர்க்க, சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பது மட்டும் ஓட்டுநர்களின் கடமையல்ல.

மாறாக, வேகத்தை குறைப்பது உட்பட வாகன ஓட்டுநர்கள் தங்களுக்கே உரித்தான பொறுப்பைகளை பின்பற்ற வேண்டும் என்று மலேசிய தேசிய சாலை பாதுகாப்பு மன்றம், MKJR-ரின் நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர், முனைவர் குழந்தையன் கேசி மணி ஆலோசனை வழங்கினார்.

நேருக்கு நேர் மோதுதல், வலது அல்லது இடது பகுதியில் மோதுதல் அல்லது பின்னால் இருந்து மோதுதல் என்று மூன்று வகையில் சாலை விபத்துகள் நிகழ்கின்றன,

முதல் இரண்டு வகையிலான விபத்துகள் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்றும் பெரும்பாலும் சாலை சமிக்ஞை விளக்கு பகுதிகளில் அதிகம் நிகழ்வதாகவும் குழந்தையன் குறிப்பிட்டார்.

இது போன்ற தருணங்களில் ஓட்டுநர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அவர் விளக்கினார்.

''ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளது. உங்களுடைய வாகனத்திலும் சாலையிலும் எப்போதும் கவனம் இருக்க வேண்டும். வாகனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது தூக்கமாக இருந்தால் கவனம செலுத்த முடியாது,'' என்றார் அவர்.

மற்றொரு நிலவரத்தில், சுமார் 70 விழுக்காடு மோட்டர் சைக்கிள் வாகன ஓட்டுநர்களை உட்படுத்தியே அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுவதோடு, மரணங்களும் பதிவாகுவதாக குழந்தையன் சுட்டிக் காட்டினார்.

இதர வாகனங்களுடன் ஒப்பிடுகையில், மோட்டர் சைக்கிள் சிறிய வாகனமாக இருப்பதால் எளிதில் விபத்துக்குள்ளாகின்றது.

''காரில் பயணிப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உள்ளது. ஆனால், மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு அது கிடையாது. எந்தவொரு விபத்து நடந்தாலும் அவர்களது உடல் நேரிடியாக பாதிக்கும்,'' என்றார் அவர்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வேகத்தை குறைப்பது, தெளிவான வண்ணங்களில் ஆடைகள் அணிவது போன்றவற்றை மோட்டர் சைக்கிள் ஓட்டுநர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், பாதுகாப்பான பயணத்திற்கு பொது போக்குவரத்தும் சிறந்த வழி என்று அவர் அறிவுறுத்தினார்.

மரணங்களை உட்படுத்திய விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து, இன்று முனைவர் குழந்தையன் பெர்னாமா செய்திகளுடன் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)