கோலாலம்பூர், பிப்ரவரி 24 (பெர்னாமா) -- Akalbudi அறவாரியத்தின் நிதி சம்பந்தப்பட்ட நம்பிக்கை மோசடி, ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பான 47 குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவித்து, விடுதலைச் செய்ய கோரி, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி செய்த விண்ணப்பத்தை அரசு தரப்பு எதிர்க்கவில்லை.
இன்று அவ்வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பு பிரிவின் இரண்டாவது துணைத் தலைவர் டத்தோ படியுஸ் சமான் அஹமட் அவ்விவகாரத்தை உயர் நீதிமன்ற நீதிபதி நூருல்ஹூடா நூராய்னி முஹமட்டிடம் தெரிவித்தார்.
இருப்பினும், டாக்டர் அஹ்மட் சாஹிடின் விண்ணப்பத்திற்கு அரசுத் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காவிட்டாலும், மலேசிய வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில், அவ்விண்ணப்பம் தொடர்பில் நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்காது என்றும் நீதிபதி நூருல்ஹூடா நூராய்னி கூறினார்.
டாக்டர் அஹ்மட் சாஹிட் வழக்கு விசாரணையை நிறுத்திய தேசிய சட்டத்துறை தலைவரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக, மலேசிய வழக்கறிஞர்கள் சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் எந்தவொரு முடிவும் இந்த வழக்கைக் கட்டுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)