பொது

அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்படும் சாலைகளை விற்பனை செய்ய அனுமதி இல்லை

25/02/2026 03:06 PM

ஜாலான் பார்லிமன், 25 பிப்ரவரி (பெர்னாமா) --  அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்படும் பொது சாலைகளை, தனியார் நிறுவனங்களுக்கு விற்கவோ அல்லது ஒப்படைக்கவோ அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.

சம்பந்தப்பட்ட அந்நிலம் நாட்டின் சொத்து என்றும், குத்தகை ஒப்பந்தத்தின் மூலம் சாலையின் மேம்பாடு அல்லது பராமரிப்பிற்காக மட்டுமே தனியார் துறையின் ஈடுபாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை துணை அமைச்சர் சைட் இப்ராஹிம் சைட் நோ கூறினார்.

"மூடப்படுவது, அகற்றப்படுவது அல்லது சாலையின் நிலையை மாற்றுவது ஆகியவை, 1976-ஆம் ஆண்டு நகரம் மற்றும் கிராம திட்டமிடல் சட்டம், சட்டம் 172 அல்லது 1974-ஆம் ஆண்டு சாலைகள், வடிகால்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம், சட்டம் 133 உட்பட 1965-ஆம் ஆண்டு தேசிய நிலக் குறியீடு சட்டம், சட்டம் 828 ஆகியவற்றின் கீழ் உள்ள தரப்பினர்களின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்", என்றார் அவர்.

இன்று, மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது, அவர் அதனை கூறினார்.

இந்த செயல்முறை பொதுப்பணி துறை மற்றும் ஊராட்சித் தரப்பினரால் ஆய்வு செய்யப்படுவதை உள்ளடக்கி இருப்பதோடு, மாநில அமலாக்கத் தரப்பிடமிருந்து ஒப்புதல் பெறுவதும், அதற்கு சமமான அல்லது சிறந்த மாற்றுப் பாதையை வழங்க வேண்டிய அவசியமும் அதில் அடங்கியிருப்பதாக, சைட் இப்ராஹிம் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)