பொது

தைப்பிங்கில் கனமழையுடன் கூடிய புயல் காற்று; பல வீடுகள் சேதம்

25/02/2026 07:13 PM

தைப்பிங், 25 பிப்ரவரி (பெர்னாமா) --  நேற்று, பேராக்கின் தைப்பிங் மற்றும் புக்கிட் கந்தாங் ஆகிய பகுதிகளில் மாலை சுமார் 4.30 மணிக்கு ஏற்பட்ட கனமழையுடன் கூடிய புயல் காற்றினால், அப்பகுதியில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

எனினும், அச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைட் அபு உசேன் கூறினார்.

இச்சம்பவத்தில் பெரும்பாலும் பொருள் சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளதாவும், சுமார் 145 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டத்தோ சைட் தெரிவித்தார்.

''சிலர் தைப்பிங் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் புக்கிட் கந்தாங் தொகுதியைச் சேர்ந்தவர்கள். நான் தைப்பிங் மக்களுக்கு மட்டும் உதவி செய்ய மாட்டேன். மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க நான் அனைவருக்கும் உதவி செய்வேன்'', என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தைப்பிங், தாமான் காயாவில் உள்ள ஒரு பொது மண்டபத்தில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 400 ரிங்கிட் உதவித்தொகையை அவர் வழங்கினார்.

கனமழையுடன் கூடிய புயல் காற்றினால் பல வீடுகளின் மீது மரம் விழுந்ததோடு, கூரை காற்றில் பறந்தது.

மேலும், வணிக வளாகங்கள், ரமலான் சந்தைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகியவைப் பாதிக்கப்பட்டுள்ளதாக, தைப்பிங் நகராண்மை கழக உறுப்பினர் சுப்ரமணியம் ரிஷி கூறினார்.

இதனிடையே, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிலர் தங்களின் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

புயல் காற்றினால் சேதமடைந்த வீட்டின் கூரைகளைப் பழுதுப் பார்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதன் செலவுகள் சுமார் 10 லட்சம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)