சிறப்புச் செய்தி

மார்ச் 2-இல் தெலுக் பஹாங் ஶ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் 129-வது மாசிமக தெப்பத் திருவிழா

25/02/2026 07:24 PM

தெலுக் பஹாங், பிப்ரவரி 24 (பெர்னாமா) -- பினாங்கு, தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் வீற்றிருக்கும் Sri சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் 129-வது மாசிமக தெப்பத் திருவிழா எதிர்வரும் மார்ச் இரண்டாம் தேதி விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் ஊதியம்பெற வழிவகுக்கும் கடலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இப்பகுதியில் வசித்து வந்த மீனவர்கள் இத்திருவிழாவைக் கொண்டாடி வந்தனர்.

தொன்று தொட்டு ஒவ்வோர் ஆண்டும் இந்த மாசிமக தெப்பத் திருவிழா கொண்டாடப்பட்டு வருவதாக ஶ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் தலைவர் ஏ.கணபதி தெரிவித்தார்.

''இது பழைமையான கோவில். இதற்கு முன்னர் இருந்த சிலைகள், விக்கிரகங்கள் அனைத்தும் இந்தக் கடலில்தான் விட்டிருந்தார்கள். அவற்றிருக்கும் இன்னும் சக்தி உள்ளது என்ற நம்பிக்கையில் இந்தக் கடலில் ஒரு பூஜை செய்து திருவிழாவைக் கொண்டாடி வருகிறோம்,'' என்றார் அவர்.

இத்திருவிழாவிற்கான தயார்நிலை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், தெலுக் பஹாங் பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருவதாக கணபதி தெரிவித்தார்.

''சுமார் 30-இல் இருந்து 50 பேர் வரை தன்னார்வலர்களாக வந்து ஆலயத் தரப்பிற்கு உதவுவார்கள்,'' என்றார் அவர்.

திருவிழாவின் போது காலை 6.30 மணி தொடங்கி பால்குடம் உட்பட மக்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள்.

நண்பகல் மணி 12.00 அளவில் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் அன்னதானம் வழங்கப்படும் என்று கணபதி தெரிவித்தார்.

மீண்டும் மாலை மணி 6.00க்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தேர், கடலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)