கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- கொவிட்-19-இன் கடுமையானத் தாக்கத்திலிருந்து வலுவான திருப்பத்தை ஏற்படுத்தி எவர்செண்டாய் கார்பரேஷன் நிறுவனம், சுமார் 1,500 கோடி ரிங்கிட் மதிப்புடைய உலகளாவிய திட்டங்களை ஏலம் எடுத்ததன் மூலம், முதல் முறையாக அதன் வருமானம் 200 கோடி ரிங்கிட்டை தாண்டியுள்ளது.
வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தாதது, திவால்நிலை மற்றும் திட்ட அமலாக்கத்தில் ஏற்பட்ட தடை காரணமாக பெரும் இழப்புகளை ஏற்படுத்திய அந்தத் தொற்றுநோய்க்குப் பிறகு, எவர்செண்டாய் நிறுவனத்தின் வலுவான மீட்சியை அந்த வருமானம் காட்டுவதாக அதன் தலைவரும் குழும நிர்வாக இயக்குநருமான டான் ஸ்ரீ ஏ.கே. நாதன் ஏழுமலை கூறினார்.
இந்தக் காலகட்டத்தில், கட்டமைப்பு எஃகு மற்றும் பொறியியல் நிறுவனம், 35 கோடி ரிங்கிட்டில் இருந்து 40 கோடி ரிங்கிட் வரை, இழக்க நேரிட்டதால், அதன் வருமானம் எதிர்மறையான நிலைக்கு தள்ளப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
''ஐக்கிய அரபு சிற்றரசில், இரண்டு நிறுவனங்கள் திவாலாகிவிட்டதாலும், சில நிறுவனங்கள் கொவிட்டு-க்குப் பிறகு மூடப்பட்டதாலும் நாங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தோம். எங்களுக்கு வருமானம் இல்லை. ஆனால் ஊதியம் மற்றும் பிற செலவுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது,'' என்றார் அவர்.
2024-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு கோடியே 34 லட்சம் ரிங்கிட்டைக் காட்டிலும் 2025-ஆம் ஆண்டில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை எவர்செண்டாய் நிறுவனத்தின் நிகர லாபம் 11 கோடியே நான்கு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் பதிவாகியுள்ளதாக நேற்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன் முக்கிய கட்டுமான எஃகு வணிகத்தைத் தவிர்த்து, எவர்செண்டாய் நிறுவனம் ஐக்கிய அரபு சிற்றரசு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தரவு மையத் திட்டங்களிலும், ஐரோப்பாவில் காற்றாலை மின்திட்டங்களிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)