பாகான் டத்தோ, 28 பிப்ரவரி (பெர்னாமா) -- வணிக சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கத்துடன் சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளரான மைடின் முஹமட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், நாட்டில் தனது 75-வது மைடின் மார்ட் கிளையை பாகான் டத்தோவில் திறந்துள்ளது.
துணைப் பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி அப்புதியக் கிளையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இப்பல்பொருள் பேரங்காடி, Tri Shaas நிறுவனத்தின் கீழ் செயல்படவிருக்கும் நிலையில், இது 10 லட்சம் ரிங்கிட் முதலீட்டை உட்படுத்தி இருப்பதாக மைடினின் நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் தெரிவித்தார்.
பயனீட்டாளர்கள் மலிவு விலையில் தரமான பொருள்கள் பெறுவதை உறுதி செய்வதற்கான வியூகத் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதியக் கிளை அமையும் என்று டத்தோ அமீர் கூறினார்.
''பாகான் டத்தோ வெறும் பட்டணம் மட்டுமல்ல. இது வேகமாக வளர்ச்சி காணும் ஓரிடம். அதன் பொருளாதார ஆற்றல் மிகப்பெரியது மற்றும் பாகான் டத்தோவில் மக்கள்தொகையும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. இக்கிளை திறப்பு எங்களின் வணிக இலக்குடன் பொருத்தமானதாக அமைகிறது,'' என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வேலை வாய்ப்பை அளிப்பதோடு, தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் விநியோகிப்பாளர்கள் தங்களின் வியாபாரத்தை விரிவுப்படுத்தவும் இது உதவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]