கோலாலம்பூர், 2 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்கா விதித்துள்ள அண்மைய வரிகள், மலேசிய செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் குறைந்தபட்ச தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, கென்யா மற்றும் சீனா போன்ற நாடுகளைக் காட்டிலும், அமெரிக்கா மலேசியாவிற்கான முதன்மை செம்பனை எண்ணெய்க்கான சந்தை அல்ல என்றும், அந்நாட்டிற்கான ஏற்றுமதி 1.1 விழுக்காடு மட்டுமே என்றும் தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் கூறினார்.
தாக்கத்தைப் பொறுத்தவரை, விளைவுகள் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அமெரிக்காவில் செம்பனை எண்ணெய் பயன்பாடு தொழில்துறையின் தேவைகளைப் பொறுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.
''அமெரிக்கா, மலேசிய செம்பனை எண்ணெய்க்கு ஒரு மிகப்பெரிய சந்தை அல்ல. மேலும், இந்தியா, கென்யா மற்றும் சீனாவிற்கு நாம் அதிகமாக இறக்குமதி செய்வதோடு, இந்தியா போன்ற பிற முக்கிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்த சந்தைக்கான ஏற்றுமதி சிறியது. மலேசிய செம்பனை எண்ணெயில், அமெரிக்கா 24-வது பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளதோடு இது 1.1 விழுக்காட்டை மட்டுமே காட்டுகிறது,'' என்றார் அவர்.
மலேசிய ரப்பர் மற்றும் செம்பனை எண்ணெய் மீதான அண்மைய அமெரிக்க வரிகளின் நேரடி தாக்கம் குறித்து, இன்று மேலவையில் செனட்டர் மைக்கல் முஜா லிஹான் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு டாக்டர் நோராய்னி அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)