சிப்பாங், 06 மார்ச் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களின் மூலம் பல விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்கள் நேற்று பாதுகாப்பாக நாடு திரும்பினர்.
துபாயில் இருந்து அவர்களை ஏற்றி வந்த எமிரேட்ஸ் EK342 ரக விமான, நேற்றிரவு மணி 9.40-க்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.எ முனையம் ஒன்றில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஐரோப்பாவில் விடுமுறையைக் கழித்து விட்டு குடும்பத்தினருடன் துபாயில் சிக்கிக் கொண்டதாக, மலேசியாவைச் சேர்ந்த பிரதீவ் ராவ் கூறினார்.
"பின்னர் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்பட்டது. “ஏவுகணை வருகிறது. ஜன்னல் மற்றும் பிற இடத்திலிருந்து விலகி இருங்கள்”. அனைவரும் பதற்றமடைந்தோம். என் பெற்றோரை கீழே அழைத்து வந்தேன். நாங்கள் கீழே சென்றோம். தரை தளத்திற்கு. பின்னர் அவர்கள் எங்களிடம் கூறினார்கள். தேவைப்பட்டால் அடித்தளத்திற்குச் செல்லலாம். தங்குவதற்கு மட்டும். ஆனால் அது வெறும் எச்சரிக்கை தான். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைத்து ஏவுகணைகளையும் இடைமறித்தனர். அது தாக்காது. எங்களின் தங்கும் விடுதியை அது தாக்கவில்லை", என்றார் அவர்.
துபாயில் சிக்கி இருந்த காலம் முழுவதும் அவர்கள் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட வசதிகளை ஐக்கிய அரபு சிற்றரசு UAE-உம், விமான நிறுவனமும் வழங்கியதாக அவர் கூறினார்.
இதனிடையே, மார்ச் முதலாம் தேதி அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தானும், 24 உம்ரா புனித யாத்ரீயகர்களும் ஜெட்டாவில் சிக்கிக் கொண்டதாக ஷைஃபுடின் ஹாஷிம் தெரிவித்தார்.
''உண்மையில், எங்களின் பயணம் மார்ச் முதலாம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. நாங்கள் விமான நிலையத்தில் இருக்கிறோம். நாங்கள் விமான நிலையத்தை நெருங்கும்போது, எங்கள் விமானம் தாமதமாகலாம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, எங்களை முதலில் விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், நாங்கள் விமான நிலையத்திற்கு வெளியே சுமார் இரண்டு நாட்கள் இருந்த பின்னர், எங்களுக்குத் தங்குமிடம் மற்றும் உணவுகளை விமான நிறுவனம் வழங்குவதாகக் கூறியது. எனவே, விமான நிலையம் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்திற்கு நாங்கள் இடம்பெயர்ந்தோம்'', என்று அவர் கூறினார்.
இந்நிலையில், தங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் நோக்கில் தொடர்பு சேவைகள் உள்ளிட்ட சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய துபாயில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)