பொது

இணையம் வழி வாகன ஏலம்; JPJVBID செயலி அறிமுகம்

08/03/2026 06:47 PM

மாச்சாங், 08 மார்ச் (பெர்னாமா) --  பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களின் பொது ஏலங்களை இணையம் வாயிலாக நிர்வகிக்கும் பொருட்டு JPJvBID எனும் செயலியை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே அறிமுகப்படுத்தியுள்ளது.

வாகனத்தை அப்புறப்படுத்தும் நிர்வகிப்பில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் நேர்மையை வலுப்படுத்துவதற்கான வியூக நடவடிக்கை இதுவென்று, ஜே.பி.ஜே இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.

"இந்தச் செயலியை நாங்கள் அறிமுகப்படுத்தியப் பிறகு, நேரடி பரிசோதனை இனி பயன்படுத்தப்படாது. எனவே, ஏலதாரர்கள் செயலியில் காட்டப்படும் வாகனப் படங்களை முழுமையாகப் பார்க்க வேண்டும். இதன்வழி பொதுமக்கள் மிகவும் துல்லியமான மதிப்பீடுகள் மற்றும் முடிவுகளை எடுக்க முடியும். ஜே.பி.ஜே செயலி கூடுதல் குறிப்புகளாக வாகன மதிப்பீட்டு அறிக்கைகளையும் வழங்குகிறது", என்றார் அவர்.

இன்று, கிளந்தான், மாச்சாங், லபோக்கில் உள்ள ஜே.பி.ஜே அமலாக்க நிலையத்தில் நடைபெற்ற JPJ-v-BID செயலி அறிமுக நிகழ்ச்சிக்குப் பின்னர் டத்தோ ஏடி ஃபட்லி செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜே.பி.ஜே சிலாங்கூரில் அமல்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டம், கட்டம் கட்டமாக நாடு முழுவதிலும் விரிவுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)