பொது

ஸ்கூடாய் பேருந்து விபத்து; 10 பேர் காயம்

09/03/2026 01:42 PM

ஸ்கூடாய், 09 மார்ச் (பெர்னாமா) --  நேற்றிரவு, ஜோகூர் ஸ்கூடாய் கம்போங் செபாகாட் பாருவில் ஒரு விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து, இரவு மணி 8.20-க்கு தகவல் கிடைத்ததாக ஜோகூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு தெரிவித்திருக்கிறது.

விபத்துக்குள்ளான அப்பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து கிடந்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உட்பட பத்து பேர் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டதாகவும், இரு பயணிகள் பேருந்தில் சிக்கிக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி சிக்கிக்கொண்ட இருவர் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)