பொது

OPS PANTAU: 40,000 சோதனைகள், 785 வழக்குகள் பதிவு

09/03/2026 02:56 PM

புத்ராஜெயா, 09 மார்ச் (பெர்னாமா) --  2026 Ops Pantau-வின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 40,000-க்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட பல்வேறு குற்றங்களுக்காக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் 785 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

அவற்றில், 613 வழக்குகளுக்கு ஒரு லட்சத்து 58-ஆயிரத்து 800 ரிங்கிட் மதிப்பிலான அபராதம் வெளியிடப்பட்ட வேளையில், 42 லட்சத்து 75 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பறிமுதலும் செய்யப்பட்டதாக, கே.பி.டி.என் அமலாக்கத் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.

பொருள்களின் விலை குறியீட்டைக் காண்பிக்க தவறியதே மிக அதிகமாக பதிவான நிலையில், சிலாங்கூர் மாநிலமே அக்குற்றத்தை அதிகம் புரிந்துள்ளதாக டத்தோ அஸ்மான் விவரித்தார்.

அதே காலகட்டத்தில், பொருள்களின் விலை குறியீட்டைக் காண்பிக்க தவறியது, தவறான எடை கருவிகளைப் பயன்படுத்தியது மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தும் 930 புகார்களைத் தமது தரப்பு பெற்றதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள ரமலான் சந்தைகளில் இதுவரை 13,436 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக்குற்றங்கள் தொடர்பில் கே.பி.டி.என்-னின் அதிகாரப்பூர்வ தளங்களின் மூலம் உடனடி புகார் அளிக்கும்படி அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)