புத்ராஜெயா, 10 மார்ச் (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட பங்குரிமை விவகாரம் குறித்த சிறப்புப் புலனாய்வு செயற்குழுவின் அறிக்கை விரைவில் பொது சேவைத் துறையின் ஒழுங்குமுறை வாரியத்தால் ஆராயப்படும்.
அச்செயற்குழுவின் தலைவரும், தேசிய சட்டத்துறைத் தலைவருமான டான் ஶ்ரீ முஹமட் டுசுக்கி மொக்தாரிடமிருந்து, தாமும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் அந்த அறிக்கையைப் பெற்று விட்டதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.
''நான் ஜேபிஏ-விடம் அறிக்கையைச் சமர்ப்பித்து விட்டேன். கூடிய விரைவில் நாங்கள் ஒரு ஒழுங்குமுறை வாரிய கூட்டத்தை நடத்துவோம்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம், புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஷம்சுல் அஸ்ரி கூறினார்.
இன்று, புத்ராஜெயாவில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இயந்திரம் மற்றும் நோன்புக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அத்தகவலைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)