பொது

ஏப்ரல் முதல் டி.பி.கே.எல் கீழுள்ள வியாபாரத் தளங்களுக்கு வாடகை குறைக்கப்படுகிறது

14/03/2026 03:30 PM

ஷா ஆலம், 14 மார்ச் (பெர்னாமா) - தனது மேற்பார்வையின் கீழ் உள்ள குறிப்பிட்ட வியாபாரத் தளங்கள் மற்றும் வளாகங்களுக்கான வாடகை விகிதத்தை, ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி 2027ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 50 விழுக்காடு குறைப்பதாக கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் இன்று அறிவித்தது.

கோலாலம்பூரில் உள்ள, டி.பி.கே.எல்-க்கு சொந்தமான 10,000க்கும் மேற்பட்ட வியாபாரத் தளங்கள் மற்றும் சிறு வணிக வளாகங்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார். 

இம்முயற்சி கோலாலம்பூரில் உள்ள வணிகர்கள் மற்றும் குறு வியாபாரிகள் எதிர்கொள்ளும் செயல்பாட்டு செலவுகளை குறைக்க உதவும் என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் விவரித்தார்.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருப்பதால் வாடகை விகிதங்கள் குறைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"சிறு வணிகர்கள் மற்றும் நகர்ப்புறவாசிகளின் வாழ்க்கைச் செலவின அழுத்தத்தை எதிர்கொள்ள உதவும் வகையில், பெரிய அளவில் வாடகை விகிதத்தைக் குறைக்கும் மலேசியாவின் முதல் ஊராட்சி துறைகளில் ஒன்றாக டி.பி.கே.எல் விளங்க இந்த முயற்சி வழிவகுக்கிறது." என்றார் அவர்.

வாடகைச் செலவுகளைக் குறைக்கும் இம்முயற்சி, தினசரி தேவைகளுக்காக உணவு அல்லது பொருட்களை வாங்கும் கோலாலம்பூர் மக்களுக்கும் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹன்னா கூறினார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)