உலு சிலாங்கூர், 15 மார்ச் (பெர்னாமா) -- எண்ணெய் விலை உயர்வு நாட்டின் உணவுத் துறையில் ஏற்படுத்தும் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக, ஒரு குறிப்பிட்ட உத்தியை வகுக்க நிதி அமைச்சிடமும் பொருளாதார அமைச்சிடமும், விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு ஆலோசனை பெறும்.
நாட்டின் உணவு இறக்குமதிக்கான வழிகள் தற்போது நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும், உலக எண்ணெய் விலைகளின் நிச்சயமற்ற தன்மை, அடுத்த சில மாதங்களுக்கு சில விளைவை ஏற்படுத்தும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
''எண்ணெய் விலை பிரச்சனை தற்போது தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் அடுத்த சில மாதங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் உத்திகளை வகுப்பதில் நிதி மற்றும் பொருளாதார அமைச்சுகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் நாங்கள் கேட்போம்'', என்றார் அவர்.
சனிக்கிழமை இரவு, சிலாங்கூர் உலு சிலாங்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், சாபு செய்தியாளர்களிடம் பேசினார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களைத் தொடர்ந்து, மே மாதத்திற்குப் பிறகு நாட்டின் உணவு கையிருப்புகளைத் தமது அமைச்சு மறுபரிசீலனை செய்யும் என்று முன்னதாக அவர் கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)