பொது

எம்.ஆர்.டி ரயில் மின்கம்பிகள் திருட்டு வழக்கு; தண்டனை விதிக்க சட்டங்களில் திருத்தம் செய்ய பரிந்துரை

16/03/2026 05:44 PM

புத்ராஜெயா, 16 மார்ச் (பெர்னாமா) --  எம்.ஆர்.டி ரயிலின் மின்கம்பிகள் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்க நடப்பில் உள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சிற்கு போக்குவரத்து அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

மின்கம்பிகள் திருட்டு வழக்கை சாதாரண திருட்டு வழக்காக கருத முடியாது.

ஏனெனில், அது பொது பாதுகாப்பை அச்சுறுத்துத்துவதோடு, பொது போக்குவரத்து அமைப்பின் செயல்பாட்டையும் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

''ஒரு மின்கம்பியைத் திருடுவது ஒரு குற்றம் மட்டுமல்ல பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்துவதும் ஒரு குற்றமாகும். ஏனெனில், இந்த மின்கம்பி திருடப்பட்டால், அது நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் விபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இது மிகவும் கடுமையான குற்றமாகும்'', என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில், கடந்த டிசம்பரில் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுடன் விவாதித்ததாகவும், அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சும் தொடர் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் லோக் கூறினார்.

அச்சம்பவத்திற்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வரை அண்மைய சோதனை நடவடிக்கையின் போது போலீசார் கைது செய்தனர்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)