பொது

அம்னோவில் மீண்டும் இணைவதற்கு கைரியிடம் இருந்து கடிதம்

16/03/2026 06:00 PM

கோலாலம்பூர், 16 மார்ச் (பெர்னாமா) --  அம்னோவில் மீண்டும் இணைவதற்கு அக்கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடினிடமிருந்து மேல்முறையீடு கடிதத்தை பெற்றிருப்பதாக, அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தினார்.

நேற்று, முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி, அக்கட்சியில் மீண்டும் இணைவது தொடர்பான மேல்முறையீட்டுக் கடிதத்தைத் தம்மிடம் சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.

முறையாக பரிசீலித்து, ஒப்புதல் வழங்குவதற்கு இக்கடிதம் அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தலைமையிலான ஒருங்கிணப்பு செயற்குழுவிற்கு அனுப்பப்படும் என்று முகநூல் பதிவில், டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி குறிப்பிட்டிருந்தார்.

கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து, அணிகளை வலுப்படுத்துவதகும் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களின் அரசியல் தலைவராக அம்னோவின் வலிமையை மீட்டெடுக்கவும் அச்செயற்குழு உறுதுணையாக இருக்கும் என்று துணைப் பிரதமருமான டாக்டர் சாஹிட் ஹமிடி கூறினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, உறுப்பினர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சேர விரும்பும் தனிநபர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக கடந்த மார்ச் 6-ஆம் தேதி அம்னோ அறிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)