கோலாலம்பூர், 17 மார்ச் (பெர்னாமா) -- வளைகுடா வட்டாரத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு பதற்றங்களைத் தொடர்ந்து, கட்டாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை எப்போதும் தொடர்ந்து பின்பற்றுமாறும் டோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த அண்மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, கட்டாரில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து தூதரகம் அந்த அறிவுறுத்துலை வழங்கியுள்ளது.
பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், கட்டார் இராணுவப் படை எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும், நாட்டைப் பாதுகாக்கும் திறன் கொண்டிருப்பதாகவும் கட்டார் தெரிவித்திருப்பதாக, தனது முகநூலில் டோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் பதிவிட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை எனவும் கட்டார் அரசாங்கம் தெரிவித்திருப்பதை, தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், அனைத்து மலேசியர்களும் விழிப்புடன் இருக்கவும், கட்டார் அதிகாரிகள் பிறப்பிக்கும் வழிமுறைகளை எப்போதும் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கட்டிடங்களுக்கு வெளியே இருப்பதையும் ஆபத்தான பகுதிகளில் இருப்பதையும் பொது மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படும் மலேசியர்கள், டோஹாவில் உள்ள மலேசிய தூதரகத்தை திரையில் காணும் 24 மணி நேர உதவி தொலைபேசி எண் +974 3374 6733 மூலமாகவோ அல்லது mwdoha@kln.gov.my எனும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)