உலகம்

ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல்; குறைந்தது 400 பேர் பலி

17/03/2026 12:57 PM

ஆப்கானிஸ்தான், 17 மார்ச் (பெர்னாமா) --  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப் பித்தர்களுக்கான மறுவாழ்வு மருத்துவமையத்தின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 உயிரிழந்தனர்.

இத்தாக்குதலில், மேலும் 250 பேர் காயத்திற்கு ஆளானதாக ஆப்கான் தலிபான் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஆப்கானிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான், நேற்றிரவு தங்கள் தரப்பு இராணுவத் தளங்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவு உள்கட்டமைப்புகளையே குறிவைத்து தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.

இரவு மணி ஒன்பதுக்கு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட மருத்துவ மையத்தின் பெரும்பகுதி சேதமடைந்ததாக, தலிபான் அரசாங்கத் துணைப் பேச்சாளர் ஹம்டுல்லா ஃபித்ராத் தெரிவித்தார்.

2,000 கட்டில்கள் கொண்ட அந்த மருத்துவ மையத்தில் தீயைக் கட்டுப்படுத்தி இடிபாடுகளை அகற்றி, காயமடைந்தவர்களுக்கு உதவவும் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றவும் மீட்புக் குழுவினரும் மருத்துவமனை ஊழியர்களும் இன்னும் போராடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதியில் பிப்ரவரி 26ஆம் தேதி ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)