புக்கிட் ஜாலில், 21 மார்ச் (பெர்னாமா) -- இஸ்லாம் போதிக்கும் நல்வழியில் நின்று, பொறுமை காத்து, நோன்பு நோற்று, இஸ்லாமிய அன்பர்கள் இன்று நோன்பு பெருநாளான ஈகைத் திருநாளைக் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அன்பினை பகிரும் பெருநாள்களில் ஒன்றான இந்நாளை, நாட்டில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இதர இனத்தவர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் கொண்டாடுவது வழக்கம்.
அந்த மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருந்த ஓர் அழகிய குடும்பத்தின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் குறித்த சிறப்பு செய்தி தொடர்ந்து இடம்பெறுகின்றது.
கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் வசிக்கும் அப்துல் ஹமீட் முஹமட் மற்றும் மும்தாஜ் பேகம் சைலப் டின் குடும்பத்தினர் பெருநாள் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர்.
பெருநாளை வரவேற்கும் விதமாக ஆறு வகையான பலகாரங்களைத் தயார் செய்து வைத்திருந்த நிலையில், புத்தாடை மற்றும் புன்சிரிப்போடு தொழுகையை முடித்து தங்களின் கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.
குடும்பத்தோடு பெருநாள் கொண்டாடுவதே தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றாலும், மாமியாரும் மாமனாரும் உடன் இல்லாதது தற்போது பெரும் குறையாகவே இருப்பதாக குடும்ப தலைவன் அப்துல் ஹமீட் முஹமட் கூறினார்.
''கடவுளின் ஆசிர்வாதத்தில் நாங்கள் நலமாக இருக்கின்றோம். என்னுடைய மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் இல்லாதது ஒன்றுதான் குறையாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் தவறிவிட்டனர்'', என்றார் அவர்.
பெருநாளின் போது பலவிதமான உணவுகள் தயார் செய்து வைத்திருந்தாலும் கூட, இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளான இட்லி மற்றும் தோசைக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதாக குடும்பத் தலைவி மும்தாஜ் பேகம் சைலப் டின் தெரிவித்தார்.
''இட்லி மற்றும் தோசை கண்டிப்பாக இருக்கும். அதே சமயத்தில் ரெண்டாங், கெத்துபாட் போன்ற உணவுகளும் நாங்கள் தயார் செய்து வைத்திருப்போம். என்னுடைய அம்மா ஜாவா மலாய் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் கற்று கொடுத்த வழக்கத்தை நாங்கள் பின்பற்றுவோம். ஆனால், என்னுடைய பிள்ளைகள் மற்றும் கணவருக்கு பிடிக்கும் என்பதால் இட்லி மற்றும் தோசை கண்டிப்பாக இருக்கும்'', என்று அவர் கூறினார்.
அதோடு, ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் நோன்பு பெருநாள் குடும்ப உறவுகளை நெருக்கமாக இணைக்கும் அர்த்தமுள்ள தருணமாக விளங்குவது மட்டுமின்றி அந்நாளில் பகிரப்படும் அன்பும், வாழ்த்துகளும் பாசத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாக கூறுகின்றார் அப்துல் ஹமீட்டின் சகோதரர் லொக்மான் ஹக்கிம்.
கணவரின் வீட்டில் பெருநாளைக் கொண்டாடுவது ஓர் இனிய அனுபவமாக இருக்கும் அதேவேளையில், பிறந்த வீட்டிற்குச் சென்று பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கொண்டாடும் அந்த நெருக்கமான தருணங்கள் மனதிற்குத் தனித்துவமான சுகத்தை அளிப்பதாக லொக்மான் துணைவியார் மரியன் முஹமட் தெரிவித்தார்.
இதனிடையே, நோன்பு பெருநாளை வெறும் கொண்டாட்டமாக மட்டுமின்றி அதன் ஆன்மீகப் பின்னனியையும் சமூக முக்கியத்துவத்தையும் உணர்ந்து இன்றைய இளம் தலைமுறையினர் நன்கறிந்து செயல்படுவதாக, அவ்வீட்டில் உள்ள பதின்ம வயதினர் சிலர் கூறினர்.
அன்பாலே அழகாகும் வீடு என்பதற்கேற்ப கூட்டு குடும்பத்தில் கொண்டாட்டத்தில் அப்துல் ஹமீட்டின் வீடு, இன்று சொந்த பந்தங்களாலும் அன்பாலும் நிறைந்து காணப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)