பொது

தேசிய நல்லிணக்கத்தைப் பேணுவதில் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பு அளப்பரியது

22/03/2026 05:33 PM

கோலாலம்பூர், 22 மார்ச் (பெர்னாமா) -- தேசிய நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான நேர்மறை நடவடிக்கையாக, அண்மையக் காலமாக மலாய் மற்றும் இந்திய சமூகங்கள் தொடர்பான பிரச்சனைகளில் நிலவும் பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபடும், அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடு அமைந்துள்ளது.

பிளவுகளை நிராகரித்து அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக இருப்பதையும், உணர்வுப்பூர்வ பிரச்சனைகளைக் கையாள்வதற்கு பேச்சுவார்த்தையே மிகவும் பயனுள்ள முறை என்பதையும் இந்த அணுகுமுறை வலியுறுத்துவதாக, தேசிய ஒருமைப்பாட்டு போராளி டான் ஶ்ரீ லீ லாம் தாய் கூறுகிறார். 

''எனவே, நம் நாட்டில் இனங்களுக்கு இடையிலான மோதல்கள் குறித்த பிரச்சனைகளைத் தீர்க்க உதவ முன்வரும் அக்கறையுள்ள அரசு சாரா அமைப்புகள் அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இறுதியில், நான் இங்கு முன்மொழிய விரும்பும் மிக முக்கியமான கொள்கை இதுதான்; இந்த பல்லின சமூகத்தில் வாழும் நாம் வேறுபாடுகளை மதிக்க வேண்டும், ஒற்றுமையைப் போற்ற வேண்டும், அமைதியை நேசிக்க வேண்டும்,'' என்றார் அவர். 

பிரிவினையை நிராகரித்து அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் மக்களிடம் உள்ள முதிர்ச்சியின் பிரதிபலிப்பாக, மலாய் மற்றும் இந்திய சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசு சாரா அமைப்புகள், முன்னெடுக்கும் அமைதிக்கான முயற்சிகள் அமைவதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இனவாதம் தொடர்பான விவகாரங்களையோ அல்லது பிற உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளையோ அரசாங்கத்தால் தனியாகக் கையாள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே, அரசு சாரா அமைப்புகள் போன்ற பிற தரப்பினரின் ஈடுபாடு இவ்விவகாரத்தில் இன்றியமையாத ஒன்று என்பதை டான் ஶ்ரீ லீ வலியுறுத்தினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]