விளையாட்டு

மயாமி டென்னிஸ்; அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

23/03/2026 06:43 PM

மயாமி, 23 மார்ச் (பெர்னாமா) -- மயாமி பொது டென்னிஸ் போட்டியின் மூன்றாம் ஆட்டத்தில் தோல்வி கண்டு உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கார்லோஸ் அல்கராஸ் தமது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவின் செபாஸ்தியன் கோர்டாவுடன் கார்லோஸ் அல்கராஸ் விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் எளிதாக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் செட்டிலேயே அவர் 3-6 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.

இருப்பினும் இரண்டாம் செட்டில் 7-5 என்று வெற்றி பெற்றாலும், வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டில் 4-6 என்ற நிலையில் தோல்வியடைந்தார்.

ஆடவருக்கான மற்றோர் ஆட்டத்தில், ரெய்லி ஓபெல்காவுடன் மோதிய டெய்லர் ஃபிரிட்ஸ் 6-3 6-4 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.

இதனிடையே, மகளிருக்கான பிரிவில், கசக்ஸ்தானின் எலெனா ரைபாகினா, நான்காம் ஆட்டத்திற்கு தேர்வாகினார்.

உக்ரேனின் மார்டா கோஸ்ட்யூக்குடன் 6-3 6-4 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்ற ரைபாகினா, அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் தாலியா கிப்சனுடன் மோதவுள்ளார்.

சீனாவின் கின்வென் செங் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அடுத்த ஆட்டத்திற்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சுடன் விளையாடிய அவர், 4-6 6-2 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.

2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தங்கம் வென்ற செங், அடுத்த ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை சபலென்காவுடன் களம் காணவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)