கோலாலம்பூர், 24 மார்ச் (பெர்னாமா) -- சீனா செங்டுவில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு தெ டான்ஸ் ஒஃப் ஆசியா (THE DANCE OF ASIA) எனும் நடனப் போட்டியில் முதல் பரிசை வென்று சிலாங்கூர், கிள்ளானைச் சேர்ந்த 11 வயது நடனக் கலைஞர் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில், கிள்ளான் ஹைலேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி யோஷ்னா லோகேந்திரன் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்க விருதையும், தமது ஒட்டுமொத்த திறனுக்காக வெள்ளி விருதையும் வென்றுள்ளார்.
அனைத்துலக அளவில் முதல் முறையாகக் கலந்து கொண்டு தமது மூத்த பிள்ளை வெற்றி பெற்றிருப்பது தமக்கும் தமது தங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாக, யோஷ்னாவின் தாயார் பி. மோஹனேஸ்வரி தெரிவித்தார்.
''அவர் நன்றாகப் பாடம் பயில்வார். அதே நேரத்தில் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள நான் ஊக்கமளித்தேன். அதற்குப் பல வகுப்புகளுக்கு நான் அவரை அனுப்பினேன். அதில் அவரை மேம்படுத்தி இந்த போட்டியில் கலந்து கொள்ள வைத்து, இன்று இந்த விருதை வாங்கியது எங்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டிற்கு (சீனா) சென்று போட்டியில் வெற்றி பெறுவது சிறந்தது என்று நான் நினைக்கிறேன்,'' என்று அவர் கூறினார்.
ஐந்து வயதிலேயே நடனமாடத் தொடங்கி, நடன நுட்பங்களையும் அசைவுகளையும் செம்மைப்படுத்துவதில் யோஷ்னா ஆர்வம் காட்டியதாக அவரின் பயிற்றுநர்கள் தெரிவித்தனர்.
''யோஷ்னா சிறந்த மற்றும் ஆர்வமிக்க நடனக் கலைஞர். நாம் எந்தவொரு கடினமான அசைவுகளை (நடனம்) கொடுத்தாலும் அவர் அதை எளிதாகச் செய்து காட்டுவார். அந்த அர்ப்பணிப்பு தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. அவர் மேலும் பல வெற்றிகள் அடைய எனது வாழ்த்துகள்,'' என்று யோஷ்னாவின் நடன பயிற்றுநர் கேசவராஜ் தண்ணீர்மலை தெரிவித்தார்.
''யோஷ்னாவுக்குக் கற்றுக் கொடுத்தது மிகவும் பலனுள்ள ஒரு பயணமாக இருந்தது. அவள் மிகுந்த ஆர்வம் கொண்டவள். எப்போதும் கற்றுக் கொள்ள விரும்புவாள். அது அவளை மிக வேகமாக வளர வைத்தது. அவள் தொடர்ந்து வளர்வாள் என்று எதிர்பார்க்கின்றேன். நம்பிக்கையுடன் இருங்கள். இந்த கட்டத்தின் அனைத்து தருணங்களையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும்,'' என்று யோஷ்னாவின் மற்றொரு நடன பயிற்றுநர் யீ வொன் வெங் கூறினார்.
யோஷ்னாவின் இந்தச் சாதனை, அவருடைய கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த உண்மையான வெகுமதி என்று அவரின் தந்தையான, மலாக்கா போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் ஏ.எஸ்.பி. எஸ். லோகேந்திரன் தெரிவித்தார்.
பெலெ, ஹிப் ஹாப், கே-பாப், பெல்லி மற்றும் லத்தீன் நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைக் கொண்டு தெ டான்ஸ் ஒஃப் ஆசியா நடனப் போட்டி அனைத்துலக அளவில் நடத்தப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)