கோலாலம்பூர், 26 மார்ச் (பெர்னாமா) -- மார்ச் 27 முதல் 29ஆம் தேதி வரை, கோலாலம்பூருக்குத் திரும்புவதற்காக, நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 20 லட்சம் முதல் 23 லட்சம் வரை கணிசமாக அதிகரிக்கும் என்று PLUS மலேசியா நிறுவனம் எதிர்பார்க்கிறது.
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விடுமுறைக்குப் பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்லும் தூரப் பயணம் மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயணங்கள் இந்த எண்ணிக்கையில் அடங்கும் என்று பிளஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சுமூகமான பயணத்திற்கு, MyPLUS-TTA இலக்கவியல் பயணத் திட்டத்தைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று பிளஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
PLUS செயலி மூலம் அணுகக்கூடிய MyPLUS-TTA பயண அட்டவணையைப் பின்பற்றி, நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்து சீராக இருப்பதற்கு உதவும் வகையில், பரிந்துரைக்கப்பட்ட நேரங்களுக்கு ஏற்ப தங்களின் சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் பயணத்தைத் திட்டமிடுமாறு சாலையைப் பயன்படுத்துபவர்கள், அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு, PLUS நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 இடங்களில் Smart Lane வழித்தடங்களைச் செயல்படுத்தியதோடு, சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக, 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட PLUS-Ronda உறுப்பினர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டதை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியது.
போக்குவரத்துக் குறித்த அண்மையத் தகவல்களை PLUS-சின், X @plustrafik செயலி, X @lpt2trafik அல்லது நெடுஞ்சாலையோரமுள்ள மின்னியல் தகவல் திரைகள், VMS மற்றும் உள்ளூர் வானொலி நிலையங்கள் வழி பெறலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)