கோலாலம்பூர், மார்ச் 26 (பெர்னாமா) -- அண்மைய காலமாக நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தால் பல அடிப்படைப் பொருள்களின் விலை அதிகரிக்கப்படும் என்று பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
அவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும் உணவுப் பொருள்களின் விலை ஏற்றப்படாமல் தற்போது நடைமுறையில் உள்ள அதே விலைப்பட்டியலே பின்பற்றப்படும் என்று பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ முஹமட் மோசின் அப்துல் ரசாக் தெரிவித்தார்.
மத்தியக் கிழக்கு நெருக்கடியால் உலக பொருளாதாரமே நிலைக்குலைந்து நிற்கும் நிலையில் மலேசியாவும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்றாலும், பிரெஸ்மாவை பொறுத்த வரை இலாபத்தைக் காட்டிலும் வாடிக்கையாளர்களின் திருப்திக்கே அது முக்கியத்துவம் அளிக்கும் என்று அவர் கூறினார்.
"எங்களால் முடிந்த வரையில் நடப்பில் உள்ள விலைப்பட்டியலைப் பின்பற்றுவோம். ஒருவேளை எங்களாலும் முடியாத நிலையில் விலையேற்றத்தை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அரசாங்கமும் எங்களின் நிலையை உணர்ந்து எங்களுக்குத் தேவையான உதவிகள் புரியும் என்று நான் எதிர்ப்பார்க்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
விலைவாசி உயர்வால் பிரெஸ்மாவின் கீழிருக்கும் பல உணவகங்கள் இவ்வாண்டு தொடக்கம் முதல் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருகின்றது.
இந்நிலை இப்படியே நீடித்தால் உணவக உரிமையாளர்களின் நிலை கவலைகிடமாகிவிடும் என்று தாம் நினைவுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, உள்நாட்டவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்க உணவகங்கள் முன்வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்நாட்டவர்களிடம் இல்லை.
அதன் காரணமாகவே அந்நிய நாட்டவர்களை அதிகளவில் வேலைக்கு எடுப்பதாகக் கூறிய டத்தோ முஹமட் மோசின், இருப்பினும் ஓர் உணவகம் திறக்கப்படும் போது அதன் மூலமாக குறைந்தபட்சம் இருபது உள்நாட்டு விநியோகஸ்தர்களின் வணிக வளர்ச்சிக்கு அந்த உணவகம் துணைப் புரிகிறது என்றும் விளக்கமளித்தார்.
"உணவகத்திற்குள்ளே பல்வேறு வியாபாரங்களை பொருள்கள் விநியோகிப்பிற்கும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது ஓர் உணவகம் என்றில்லாமல் பல உணவுகங்களில் அவர்கள் இம்முறையை மேற்கொள்வர். இதனால் சாதாரண வணிகர்களாக இருக்கும் அவர்கள் தங்களின் வணிக வளர்ச்சியால் வரி செலுத்தும் அங்கீகாரம் உடையவர்களாக உயர்த்தப்படுகிறார்கள்," என்றார் அவர்.
எனவே, நாட்டிற்கு வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளில் உணவகங்களும் முக்கிய பங்கு வகிப்பதால் அதன் வளர்ச்சிக்கும் சுமூகமான நடைமுறைக்கும் அரசாங்கம் தேவையான அனுகூலங்களையும் தளர்வுகளையும் வழங்க வேண்டு என்று டத்தோ முஹமட் மோசின் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)