உலகம்

இந்தியாவில் திரவ பெட்ரோலிய எரிவாயு கலன்கள் பற்றாக்குறை; மக்கள் அவதி

29/03/2026 05:23 PM

புதுடெல்லி, 29 மார்ச் (பெர்னாமா) -- விநியோகப் பற்றாக்குறையால் பொதுமக்கள் விரக்தியடைந்த நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் திரவ பெட்ரோலிய எரிவாயு, எல்.பி.ஜி கலன்களை நிரப்புவதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

குறைந்த எண்ணிக்கையிலான எல்.பி.ஜி கலன்களே விநியோகிக்கப்படுவதாகவும், பலர் பல மணிநேரம் காத்திருந்தும் வாங்க இயலவில்லை என்றும் பயனீட்டாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தியாவுக்குத் திரவ பெட்ரோலிய எரிவாயுவை ஏற்றி வரும் இரு கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்திருந்தாக கூறப்படுகிறது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர், ஹார்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இருப்பினும், ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்தால், சரக்கு கப்பல்கள் அந்த நீரிணையைக் கடந்து செல்லலாம் என்று ஈரான் கூறியது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 3 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டது.

இதில் சுமார் 60 விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்டவர்.

அந்த இறக்குமதியில் சுமார் 90 விழுக்காடும் மத்திய கிழக்கிலிருந்து பெறப்பட்டவை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)