உலகம்

டிரம்ப் மீதான முறைகேடு வழக்கு நவ.26-க்கு ஒத்திவைப்பு

07/09/2024 07:37 PM

நியூயார்க், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான முறைகேடு குறித்த வழக்கின் தீர்ப்பு வரும் நவம்பர் மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 5-ஆம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் களமிறங்குவதால் அதில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2017 முதல் 2021 வரை, டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தார்.

அப்போதைய அதிபர் தேர்தலுக்கு முன்னதாக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர், இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.

தேர்தலுக்கு முன்னதாக, வரும் செப்டம்பர் 18-ம் தேதி தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 5-ம் தேதி தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு டிரம்ப் நீதிபதியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதிபர் தேர்தல் முடியும் வரை டிரம்புக்கான தண்டனை விதிப்பதை ஒத்திவைக்க அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]