பொது

நிகழ்கால பிரச்சனைகள் & எதிர்கால சவால்களை அறியாத தலைமைத்துவம் கால ஓட்டத்தில் மறைந்துவிடும்

08/09/2024 07:55 PM

கோலாலம்பூர், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  நிகழ்கால பிரச்சனைகளையும் எதிர்கால சவால்களையும் பற்றி தெரிந்துக் கொள்ளாத தலைமைத்துவம் கால நீரோட்டத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

அதேவேளையில், பிரச்சாரம் செய்வது, ஆதரவு திரட்டுவது, பதாகை பிடிப்பது போன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்காமல்...

கட்சியின் வழிதோன்றலையும் அதன் மரபினையும், உறுப்பினர்களான இளைஞர்களும் யுவதிகளும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பதே விவேகமானது என்று மஇகாவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்

மஇகாவில் தற்போது இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி என்று தலைமைத்துவ பொறுப்பில் உள்ள அனைவருமே புதிய முகங்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில், கட்சியை புத்தாக்கப் பாதையில் வழிநடத்தி அதன் உருமாற்றத்திற்கு அவர்கள் வித்திடுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.

"கடந்த காலங்களில் நாம் மத்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்த போது இருந்த ஊக்கத்தைவிட இன்று அதிகமான ஆதரவினையும் பலத்தினையும் இளைஞர்கள் கொண்டுள்ளனர். கட்சிக்கு புதிய எழுச்சியை இது ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்தில் கட்சி சார்ந்த ஒரு விஷயத்தை பதிவேற்றினால்  மஇகா இன்னும் இருக்கிறதா என்று சிலர் கிண்டலடிப்பர். அத்தகையோர் எங்களின் சமூகவலைத்தளத்தை முழுமையாகப் பார்த்தால் சமூகத்துடன் யார் அதிக தொடர்பில் இருக்கிறார்கள் என்ற உண்மை புலப்பட்டுவிடும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, கட்சியின் கிளையில் இருக்கும் பொறுப்பாளர்கள் வேலை செய்வதற்கு சுணங்கினால் அவர்களை தற்காலிகமாக நீக்குவதிலும் இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி தலைமைத்துவம் துணிச்சலான முடிவுவெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதோடு, மஇகா எதிர்கொண்டிருக்கும் தற்போதைய சவால் குறித்தும் அவர் இவ்வாறு கூறுகின்றார்.

"மத்திய அரசாங்கத்தில் எவ்வித பொறுப்புகளையும் ஏற்காத ஒரு கட்சியாக மஇகா விளங்கி வருகிறது. இது மஇகா எதிர்நோக்கும் நிகழ்கால பிரச்சனையாகும். இந்நிலை தொடரவும் வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தையோ அல்லது மற்ற தரப்பினரையோ நம்பி இருக்காமல் சுயகாலில் நிற்பதற்கான முன்னேற்பாடுகளை கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் சிறப்பாக வரையப்பட்டுள்ளது," என்றார் அவர்.

எனவே, கட்சி அரசாங்க பலத்துடன் செயல்பட்டாலும் அல்லது தனித்து நின்றாலும், இந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எப்போதும் அரணாக இருக்கும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் உறுதி கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற மஇகா இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரிகளுக்கான 37ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

நாடு தழுவிய அளவிலிருந்து 410 மகளிர் உட்பட மொத்தம் 1,200 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)