கோலாலம்பூர், 24 ஏப்ரல் (பெர்னாமா) - நாடு தழுவிய நிலையில் இன்று வெளிவந்த எஸ்பிஎம் தேர்வு முடிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்விக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை நாடலாம் என்று மஇகா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அதேவேளையில், குறைந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களும் தேர்ச்சி பெறாத மாணவர்களும் மனம் தளர வேண்டாம் என்றும் அவர்களுக்கு வழிகாட்ட மஇகா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்
அத்தகைய மாணவர்கள் மஇகாவின் டேஃப் கல்லூரியை நாடலாம் என்பதோடு மஇகாவின் கல்விக்குழுவிடமும் ஆலோசனை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தாங்கள் படிக்கப் போகும் துறையை மாணவர்கள் கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஏனெனில் அதுதான் அவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிடும் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்திய மாணவர்கள் கோலாலம்பூர் அல்லது அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பார்கள்.
ஒருவேளை, தூரத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்த விளக்கங்களை இலவசமாக வழங்க மஇகா கல்விக்குழு தயாராக உள்ளதால் மாணவர்கள் அதனை நாடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மருத்துவம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட துறைகளில் பயிலும் வாய்ப்பு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் இருப்பதால் அதனையும் அவர்கள் தங்கள் தேர்வாகக் கொள்ளலாம் என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)