உலகம்

வர்த்தக உறவை இந்தியா துஷ்பிரயோகம் செய்துள்ளது - டிரம்ப் குற்றச்சாட்டு

18/09/2024 05:29 PM

நியூயார்க், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- அமெரிக்கா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை இந்தியா துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் தொடர்பில், தாம் அடுத்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருப்பதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரச்சாரத்தின் போது டிரம்ப் தெரிவித்தார்.

சந்திப்பு நடத்தப்படும் இடம் தொடர்பான எந்தவொரு விவரங்களையும் அமெரிக்க அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளரான டோனல்ட் டிரம்ப் வெளியிடவில்லை.

இம்மாதம் 21-ஆம் தேதி டெலாவாரில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடனான உச்சநிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையேற்கவிருக்கிறார்.

ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், அதற்கு எதிர்மறையான கண்ணோட்டத்தில் வாஷிங்டன் புது டெல்லியை காண்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)