பொது

பேஜர் வெடித்தில் 9 பேர் பலி; 3,000 பேர் காயம்

18/09/2024 05:40 PM

லெபனான், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் பேஜர் எனப்படும் தொலைத் தொடர்பு சாதனம் வெடித்ததில் 9 பேர் பலியாகியுள்ள நிலையில் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.

பெய்ருட், சைடா, டயர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்தார்.

இஸ்ரேலுடனான சுமார் ஓர் ஆண்டுகால போர் தொடர்ந்துவரும் நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் பாதுகாப்பை மீறிய மிகப்பெரிய சம்பவமாக கருதப்படுவதாக பெயர் வெளியிடப்படாத ஹெஸ்போலாவின் அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் காசா போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹெஸ்போலாவுக்கு ஈரான் ஆதரவு வழங்கி வருகின்றது.

பல ஆண்டுகளாக நீடித்துவரும் மோசமான நெருக்கடி இதுவாகும்.

இருப்பினும், இச்சம்பவம் குறித்த எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க இஸ்ரேலிய இராணுவம் மறுத்துவிட்டது.

வெடிப்பு சம்பவத்தில் லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தாபா அமானிகாயமடைந்திருப்பதாக MEHR செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் கல்வி கழகங்களும் மூடப்படுவதாக லெபனான் அறிவித்துள்ளது.

இதனிடையே, குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு தைவான் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளும் போலீசும் இன்று கோல்ட் அப்போலா அலுவலகத்தில் கூடினர்.

லெபனானில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் தங்களது நிறுவனம் தயாரித்தது அல்ல என்றும் BAC எனப்படும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் கோல்ட் அப்போலா தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)