பொது

பெய்ஜிங் சென்றடைந்தார் மாமன்னர்

19/09/2024 08:28 PM

ஷா ஆலம், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- சீனாவுக்கு நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள நாட்டின் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று பிற்பகல் மணி 3.30 அளவில் தலைநகர் பெய்ஜிங் சென்று சேர்ந்தார்.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி 17-வது மாட்சிமைத் தங்கிய மாமன்னராக அரியணை அமர்ந்தததை அடுத்து, அக்குடியரசுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

சீன அதிபர் சீ ஜின்பிங் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணமாகி இருக்கும் அவர், சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ முனையம் வந்தடைந்தார்.

சீன துணை வெளியுறவு அமைச்சர் சீனா சன் வெய்டோங், மலேசியாவுக்கான சீன தூதர் ஊயாங் யூஜிங், சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நோர்மான் முஹ்மட் மற்றும் வெளியுறவு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அம்ரான் முஹ்மட் சாயின் ஆகியோர் மாமன்னரை வரவேற்றனர்.

பெய்ஜிங்கில் உள்ள Great Hall of the People-இல் சுல்தான் இப்ராஹிமுக்கு, சீன நாட்டு ஆயுதப் படை உறுப்பினர்களின் அதிகாகாரப்பூர்வ வரவேற்பும் மரியாதையும் நல்கப்பட்டது.

மாமன்னருடன், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.

இதனிடையே, இன்று காலை மணி 9.40 அளவில், சுபாங், அரச மலேசிய ஆகாயப்படை தளத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் மாமன்னர் சீனாவுக்கு பயணமானார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் காலிட் நேர்டின், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் ஹசான் மற்றும் மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் ஆகியோர் மாமன்னரை வழியனுப்பி வைத்தனர்.

அதிபர் சீ உடனான சந்திப்பு உட்பட அவர் ஏற்பாடு செய்யும் விருந்துபசரிப்பிலும் மாமன்னர் கலந்துகொள்வார்.

சீனப் பிரதமர் லி கியாஙையும் மாமன்னர் சந்திக்கவிருக்கும் வேளையில், சீனாவின் விமான தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்வையிடுவதற்காக பெய்ஜிங் பொது விமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கும் அவர் செல்வார்.

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசதந்திர உறவின் 50-வது நிறைவாண்டை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பயணம் அமைந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)