உலகம்

2 மணி நேரம் மலைப்பாம்பு நெருக்கிய மாது காப்பாற்றப்பட்டார்

19/09/2024 07:59 PM

சமுட் பிரக்கான், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- தாய்லாந்தில், நேற்றிரவு சமுட் பிரக்கான் எனும் பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் மலைப்பாம்பால் இரண்டு மணி நேரம் நெருக்கப்பட்டிருந்த 64 வயதுடைய மாது ஒருவர் காப்பாற்றப்பட்டார்.

இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, பிரா சமுட் செடீ போலீஸ் நிலையத்தின் அதிகாரிகளும் போ டெக் துங் அறக்கட்டளையின் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தி நேஷன் செய்தி வெளியிட்டது.

சம்பவ இடத்தை அடைந்த அவர்கள் அந்த அறையின் கதவை உடைத்தபோது அங்கு நான்கு மீட்டர் நீளத்தில் மலைப்பாம்பு ஒன்று அவரை நெருக்கிக் கொண்டிருந்ததை கண்டனர்.

சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் அவர்கள் அம்மாதுவை மலைப்பாம்பின் பிடியிலிருந்து மீட்டனர்.

முதலுதவி அளிக்கப்பட்டப் பின்னர் தொடர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அம்மாதுவின் தொடைப் பகுதியை அப்பாம்பு கடித்ததாகவும் தி நேஷன் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் தமது கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அம்மாது அந்த அறையிலேயே வாழ்ந்து வருகிறார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]