உலகம்

ஜம்மு-காஷ்மீருக்கு நரேந்திர மோடி வருகை

20/09/2024 06:54 PM

ஶ்ரீநகர், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முதல் முறையாக இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீருக்கு வருகை மேற்கொண்டார்.

அங்கு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நோக்கத்தில் மோடி அங்கு சென்றார்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

முதற்கட்டத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் புதிய வரலாற்றை படைத்துள்ளதாகவும் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

''முந்தைய சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது இப்போது நிலைமை மாறிவிட்டது. நள்ளிரவு வரையில் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்கின்றன. இன்று மக்கள் ஜனநாயகத்தை கொண்டாடுகிறார்கள். இங்குள்ள இளைஞர்கள் தங்கள் வாக்குகளால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்,'' என்றார் அவர். 

10 ஆண்டுகளுக்கு பின்னர், ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில், முதல் கட்ட வாக்குப் பதிவு, புதன்கிழமை 24 தொகுதிகளில் நடைபெற்றது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]