உலகம்

அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்கு ஆபத்து - டிரம்ப்

20/09/2024 07:33 PM

வாஷிங்டன் டி.சி, 20 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் இஸ்ரேல் பூமியின் வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என்று டொனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்கே தாம் இத்தேர்தலில் களமிறங்கியிருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபருமான டிரம்ப் கூறுகிறார்.

''கருத்துக் கணிப்பின்படி, யூத அமெரிக்கர்களிடையே எனக்கு ஆதரவு 40% மட்டுமே உள்ளது. இதனால் நான் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் யூத மக்களுக்குத்தான் இழப்பு அதிகம் இருக்கும்" என்று கூறினார்.

இன்று, "அமெரிக்காவில் யூத எதிர்ப்புக்கு எதிராகப் போராடுதல்" என்ற தலைப்பில் இஸ்ரேல்-அமெரிக்க மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது டிரம்ப் அவ்வாறு தெரிவித்தார்.

அண்மைய காலமாக, அமெரிக்காவில் வசித்து வரும் யூதர்களுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருவதற்கு, அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசும் முக்கிய காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இஸ்ரேல் ஆதரவு தற்போது வலுவாக இல்லை என்றும் டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதன் வேட்பாளர்களான டிரம்பும் கமலாவும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)