பொது

வடகிழக்குப் பருவமழை காலத்தில் காய்கறி விலை 30% வரை உயரலாம்

06/11/2024 07:19 PM

ஜோகூர் பாரு, 06 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று முதல் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து, நாட்டில்  காய்கறிகளின் விலை 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் காய்கறிகளின் விளைச்சல் 15 விழுக்காடு வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய காய்கறி உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் லிம் சேர் க்வீ  தெரிவித்தார். 

கனமழையைத் தொடர்ந்து சில பகுதிகளில் காய்கறிகள் விளையாமலும் போகலாம்.

தோட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பண்ணைகள் தவிர மற்றவை வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

இருப்பினும் தற்போது பெரும்பாலான மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தைகளில் காய்கறிகள் மலிவான விலையிலே விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையில் தொடரும் வடகிழக்குப் பருவமழையால் பயிர்கள் வெள்ளத்தில் சேதமடைந்தால்,  விலைவாசி உயர்வது திண்ணம் என்றுm லிம் எச்சரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)