கோலாலம்பூர், 04 மே (பெர்னாமா) - புதிய படைப்புகளையும் புத்தாக்கமிக்க எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் விதமாக மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் பல்வேறு தரப்பினருடன் இணைந்து மொழிசேவை ஆற்றி வருவது மறுப்பதற்கில்லை.
அச்சங்கத்தின் அடுத்தகட்ட முயற்சியாக மின்னல் பண்பலையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கும் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சுமார் 200 பேர் கலந்து கொண்ட இச்சிறுகதைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று விஸ்மா ஆர்டிஎம்-இல் உள்ள பி.ரம்லி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங், எழுத்தாளர் சங்கத்தின் சேவையைப் பாராட்டியதுடன், அமைச்சின் சார்பில் 20,000 ரிங்கிட் மானியத்தை வழங்குதாகவும் கூறினார்.
வழங்கப்படும் அந்நிதியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் இரண்டாயிரம் பிரதிகளை அச்சிட்டு அதை நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு விநியோகிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
''தமிழ் எழுத்தாளர்களை பாராட்டி ஊக்குவிக்கும் இரு சிறந்த களமாக இதை நான் கருதுகிறேன். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மின்னல் பண்பலையை நான் கேட்டுக் கொண்டேன்,'' என்று தியோ கூறினார்.
இதனிடையே, போட்டி தொடங்கிய பிப்ரவரி 20 முதல் மார்ச் 15ஆம் தேதிக்குள்
200-க்கும் மேலான சிறுகதையை எழுத்தாளர் சங்கம் பெற்றதாக அதன் தலைவர் மோகனன் பெருமாள் தெரிவித்தார்.
முதல் நிலை வெற்றியாளருக்கு மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்பட்ட வேளையில், இரண்டாம் இடத்திற்கு ஈராயிரம் ரிங்கிட்டும் மூன்றம் நிலையில் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர் ஆதிலெட்சுமி பெருமாளுக்கு ஆயிரம் ரிங்கிட் பரிசாக வழங்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு, சமூக ஒற்றுமை, மலேசியர்களின் வாழ்க்கை முறை அல்லது வாழ்வியல் ஆகிய கருபொருளை முன்னிறுத்தி படைப்பாளர்கள் சிறுகதை எழுதுமாறு இப்போட்டியில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)