தஞ்சோங் மாலிம், 04 மே (பெர்னாமா) - முக்கலைகளில் ஒன்றான நாடகம் மற்றும் நடிப்பாற்றலின் பால் இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, உயர்க்கல்விக்கழக மாணவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாட்டினை ஊக்குவிக்க பல நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அதில், பேராக், தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகமான உப்சியில் நேற்று வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் 'நாடகச் சுடர் 2025' என்ற மேடைப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
கடந்த காலங்களில் உப்சியின் தனித்துவ அடையாளமாகத் திகழ்ந்த இப்போட்டியில் ஐந்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒன்பது குழுக்கள் கலந்து கொண்டன.
2010 தொடங்கி 2018ஆம் ஆண்டுவரை வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இலக்கியம் சார்ந்த இந்த மேடைப் போட்டி, கொவிட் 19 பெருந்தொற்றுக்குப் பின்னர் ஆறு ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்தது.
இவ்வாண்டும் அந்த நிலைமை நீடித்துவிடக்கூடாது என்பதால், பல்வேறு சவால்களைக் கடந்தும் மானியங்கள் திரட்டியும் தமது குழுவினர் இப்போட்டியை சிறப்பான முறையில் நடத்தியதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும் வளர்தமிழ் மன்றத் தலைவருமான சத்தியமலர் பரமசிவன் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலக்கியம் சார்ந்த காட்சிகளை மட்டுமே மையப்படுத்தி நாடகங்கள் நடிக்கப்பட்டு வந்த நிலையில், தூய தமிழில் வசனங்களை மனனம் செய்வது மற்றும் காட்சிக்கு ஏற்ப உடைமைகளை தயார்ப்படுத்துவது போன்ற பல்வேறு சிரமங்களை பங்கேற்பாளர்கள் எதிர்கொண்டு வந்தனர்.
ஆனால், இம்முறை அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள், சந்திக்கும் அனுபவங்கள், பார்க்கும் மனிதர்கள் என்று திருக்குறள் அதிகாரத்தின் துணையோடு நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப காட்சிகள், வசனங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
"இந்த நாடகப் போட்டியில் திருக்குறளையும் கலாச்சார ரீதியில் பின்பற்ற வேண்டும் மற்றும் மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் சமூகவியல் திருக்குறள் நாடகத்தை ஏற்று நடத்தினோம்," என்று அவர் தெரிவித்தார்.
போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு குழுவிற்கும் 25 நிமிடங்கள் வழங்கப்பட்ட வேளையில், கலந்து கொண்ட அத்தனை குழுக்களும் முழு நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய திவாகர் சுப்பையா, நடிகர் டேனிஷ்குமார், பூச்சாண்டி திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஸ்வரன் கலியப்பெருமாள் ஆகியோர் இப்போட்டியின் நடுவர்களாக விளங்கினர்.
இப்போட்டில் முதல் நிலை வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 'வேதிக்கனல்' குழுவிற்கு 2,000 ரிங்கிட் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 'நிழல்வெளி' குழு இரண்டாம் இடத்தையும், துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 'துளிரும் துடிப்புகள்' குழு மூன்றாம் இடத்தையும் வென்று முறையே 1,500 மற்றும் 1,000 ரிங்கிட் தொகையைப் பெற்றனர்.
நான்காவது மற்றும் ஐந்தாவது நிலைகளில் முறையே துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 'அரங்கவில்லுகள்' குழுவும், சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 'செந்தமிழ் திரைமன்றம்' குழுவும் வெற்றி கொண்டன.
அதேவேளையில் சிறந்த நடிகர்களாக தேர்ந்த்தெடுக்கப்பட்ட 'அரங்கவில்லுகள்' குழுவைச் சேர்ந்த கௌசல்யா கிருஷ்ணனுக்கும், 'செந்தமிழ் திரைமன்றம்' குழுவைச் சேர்ந்த அஷ்வினி பெருமாளுக்கும் நற்சான்ழிதழும் ரொக்கமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும், சிறந்த நாடகமாக 'அரங்கவில்லுகள்' தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளையில், சுமார் 400-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களில் மைஸ்கில் மற்றும் மைகித்தா தொழிற்துறை மாணவர்களும் கலந்து கொண்டதாக சத்தியமலர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)