ஜோகூர் பாரு, 17 நவம்பர் (பெர்னாமா) -- கடல் எல்லைக்கான புதிய வரைபடத்தை வெளியிட வேண்டிய அவசியம் மலேசியாவுக்கு இல்லை.
அதேவேளையில், நாட்டின் இறையாண்மையும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ள கோரிக்கைகளை உட்படுத்திய சவால்களை எதிர்கொள்வதில் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளை நடத்தி அரச தந்திர உறவின் வழி முதன்மை அணுகுமுறைகளை மலேசியா எப்போதும் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"...பிலிப்பைன்ஸ் அதன் வரைபடத்தை வெளியிட்டதன் விளைவாக, புதிய வரைபடத்தை வெளியிட வேண்டியதன் அவசியம், பழைய வரைபடத்தின் மாற்றங்களைப் பொறுத்தது என்று நான் நம்புகிறேன். நமது வரைபடம் மாறாத வரைபடமாகவே உள்ளது. அவ்வப்போது அவர்கள் வரைபடத்தை மாற்றும்போது நமது பகுதியையும் அது உள்ளடக்கி விடுகிறது", என்று அவர் கூறினார்.
இன்று, ஜோகூர் பாரு, மசாயில் முஹஜிரின் பள்ளிவாசலில், Boustead Petroleum Marketing நிறுவனத்தின் Wakalah Zakat வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் அவ்வாறு கூறினார்.
வெளிநாட்டுக் கப்பல்கள் எல்லைக்குள் நுழைவது கண்டறியப்பட்டால், நிர்ணயிக்கப்பட்டுள்ள அனைத்துலக சட்டத்தின்படி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சபா கடல் எல்லையை மீறிய பிலிப்பைன்சின் புதிய இரண்டு கடல் சட்டங்கள் தொடர்பில் அந்நாட்டிற்கு மலேசியா எதிர்ப்பு அறிவிக்கையை அனுப்பியுள்ளதாக கடந்த வியாழக்கிழமை வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ முஹமட் அலாமின் தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)