பொது

தீபகற்பத்தில் குறைந்து வரும் எண்ணெய், எரிவாயு உற்பத்தி

17/11/2024 06:16 PM

கோத்தா பாரு, 17 நவம்பர் (பெர்னாமா) -- தற்போது தீபகற்ப மலேசியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி குறைந்து வந்தாலும் சபா மற்றும் சரவாக்கில் தற்போது அதன் புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருகின்றன.

அந்த வளங்கள் இதற்கு முன்னர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வருமானத்திற்கும் பெரும் பங்களிப்பை அளித்திருந்தாலும், தற்போது அவை சம்பந்தப்பட்ட அவ்விரு மாநிலங்களில் இருப்பதை பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி சுட்டிக்காட்டினார்.

"எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 700,000 பீப்பாய்களிலிருந்து குறைந்துள்ளது. எனக்கு நினைவில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரைக் காட்டிலும் தற்போது நாளொன்றுக்கு 350,00 பீப்பாய்களாக குறைந்துள்ளது," என்றார் அவர்.

இன்று கிளந்தானில், கோத்தா டாருல்நைம் வளாகத்தில் கிளாந்தான் மாநில அரசாங்கத்துடன் இணைந்து பொருளாதார அமைச்சு நடத்திய, RMK13 எனப்படும் 13வது மலேசியத் திட்டம் தொடர்பான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஃபிசி ரம்லி அதனை கூறினார்.

சபாவிலும் சரவாக்கிலும் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் சம்பந்தப்பட்ட அவ்விரு மாநிலங்களின் கோரிக்கையையும் பயன்பாட்டையும் பூர்த்தி செய்யவே பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சபா சரவாக்கின் இந்த வளங்களின் வழி கிடைக்கும் வருமானத்தை பகிர்ந்தளிப்பதற்கான வழிமுறைகளை மீண்டும் கருத்தில் கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)