மெட்ரிட், 20 நவம்பர் (பெர்னாமா) -- அனைத்துலக டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார்.
ஸ்பெயினின் தங்க மகனாகவும் களிமண் ராஜாகவும் வர்ணிக்கப்படும் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் தமது டென்னிஸ் வாழ்வில் இருந்து கண்ணீருடன் விடைப்பெற்றார்.
டென்னிஸ் ஜாம்பவான், ரஃபேல் நடால் தனது தனித்துவம் மற்றும் திறமையால் கடந்து வந்த டென்னிஸ் பயணத்தைத் தோல்வியுடன் முடித்துக் கொண்டார்.
''உண்மை என்னவென்றால், இந்தத் தருணம் வருவதை யாரும் விரும்புவதில்லை. உண்மையைச் சொல்வதானால், நான் டென்னிஸ் விளையாடுவதில் சோர்வடையவில்லை. ஆனால், இனி டென்னிஸ் விளையாட முடியாத நிலையை என் உடல் அடையும் ஒரு சூழ்நிலை. எனவே நீங்கள் நிலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது பொழுதுபோக்குகளில் ஒன்று எனது தொழில் வாழ்க்கையாகவும் மாறி, நான் நினைத்துப் பார்த்ததை விட நீண்டதொரு தொழிலாகவும் மாற்ற முடிந்ததை நான் மிகவும் சிறந்த ஒன்றாக உணர்கிறேன். நான் இந்த வாழ்க்கைக்கு மட்டுமே நன்றி சொல்ல முடியும். நான் இங்கு இருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல முடியும், '' என்றார் அவர்.
டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியி காலிறுதி ஆட்டத்தில், ஸ்பெயின் அணி 2-1 என நெதர்லாந்து அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியதை அடுத்து, நடாலும் தமது டென்னிஸ் பயணத்தை முடித்துக் கொண்டார்.
நெதர்லாந்தின் பூட்டிக் வான் டி ஜாண்ட்ஷுல்பிடம் அவர் 6-4, 6-4 என்ற நேரடி செட்களில் தோல்வியடைந்தார்.
இந்தப் போட்டியுடன் 38 வயதுடைய நடாலின் 20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கை நிறைவுக்கு வந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)