பொது

JENDELA-வின் கீழ் உள்ள திட்டங்களை பூர்த்தி செய்யாத தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

20/11/2024 06:09 PM

புத்ராஜெயா, 20 நவம்பர் (பெர்னாமா) -- தேசிய இலக்கவியல் இணைப்புத் திட்டம், ஜெண்டெலாவின் கீழ் உள்ள திட்டங்களைப் பூர்த்தி செய்யத் தவறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மக்கள் பிரதிநிதி மற்றும் பொது மக்களுக்கு, நிறுவனம் மற்றும் தலைமை செயல்முறை அதிகாரியின் பெயரை வெளியிடுவதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் செயல்படாத தொலைத்தொடர்பு கோபுரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பல புகார்கள் கிடைத்துள்ளதாக ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஒன்பது மாதங்கள் ஆன கோபுரங்கள் இருந்த போதிலும், தொலைத்தொடர்பு இணைப்புகள் இல்லாததால் அவை இன்னும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

''எனவே நான் ஒவ்வொரு தலைமை நிர்வாக அதிகாரியையும் அழைத்து நினைவூட்டும் வரை, நீங்கள் இதை செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் பெயரும் தொலைபேசி எண்ணும் கோபுரங்களில் வைக்கப்படும். அதன்வழி, தொலைத்தொடர்பு நிறுவனம்தான் தாமதம் செய்கிறது என்பதனை மக்கள் தெரிந்து கொள்ளட்டும். எனவே, அப்படி நடக்கக்கூடாது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் ஒன்றாக பணியாற்ற வேண்டியுள்ளது. எம்.சி.எம்.சி இதனைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று நான் ஏற்கனவே உறுதி செய்துள்ளேன், '' என்றார் அவர்.

புதன்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்பு அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள நிறுவனங்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறினால், ஒப்பந்தத்தை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கவும் ஃபஹ்மி பரிந்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)