கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) -- அனைத்துலக ஊழல் தடுப்பு கழகத் தலைவராக சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் நியமிக்கப்பட்டிருப்பது ஊழலைக் கையாள்வதில் மலேசியாவின் பங்களிப்பிற்கான உலக அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கிறது.
நாட்டு தலைவர்கள் உலகம் முழுவதிலும் மேற்கொண்ட பயணத்தினால் ஏற்பட்ட அனைத்துலக நல்லுறவு, ஊழல் பிரச்சனையைக் கையாள்வது உட்பட உலக அரங்கில் மலேசியாவின் பெயரை உயர்த்த உதவும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"அதிகரித்து வரும் இந்த அனைத்துலக உறவுகள் (மலேசியாவிற்கு) உதவுகின்றன. உதாரணமாக, 2025-2031 வர்த்தக சட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் ஆணையப் போட்டியில் மலேசியாவிற்கு அதிகமான வாக்குகள் அதாவது 183-இல் 179 கிடைத்துள்ளன. சுதந்திரம் அடைந்தது முதல் கிடைக்காத அடைவுநிலை இதுவாகும்", என்றார் அவர்.
85 நாடுகள் உறுப்பியம் கொண்ட ஐஎசிஎ-வில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டதோடு, ஐஎசிஎ-வின் தலைவராக பொறுப்பேற்கவும் அதற்கு டத்தோ ஶ்ரீ அசாலினா தலைவர் ஆகவும் மலேசியாவிற்கு ஆதரவும் வழங்கப்பட்டுள்ளதை டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
இன்று, மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தின்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)