பொது

கும்பலாக கொள்ளையடித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு

21/11/2024 05:44 PM

சுங்கை பட்டாணி, 21 நவம்பர் (பெர்னாமா) -- அண்மையில் மீன்பிடி பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் கும்பலாக கொள்ளையடித்ததாக, இன்று கெடா, சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில், தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, இராணுவ வீரரும் முட்டை வியாபாரியும் மறுத்துள்ளனர்.

நீதிபதி அஸ்மான் அஸ்மான் அபு ஹசான் முன்னிலையில், அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, இரண்டாவது வாரண்ட் அதிகாரி முஹமட் ரஷிடி முஹமட் யூனூஸ்சும் அபு பக்கார் சவாரும் அதனை மறுத்து விசாரணைக் கோரினர்.

இம்மாதம் 10-ஆம் தேதி, காலை மணி 11 அளவில், சுங்கை பட்டாணி, ஜாலான் லென்சோங்கன் பாராட்டில்  உள்ள சபாரான் பெலாந்தாரா எனும் மீன்பிடி பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், இருவரும் சேர்ந்து துப்பாக்கி ஏந்தியவாறு, 15 மீன்பிடி இயந்திரங்கள், 10 மீன்பிடி கம்பி சாதனங்கள் மற்றும் 5,000 ரிங்கிட் ரொக்க பணத்தை கொள்ளையடித்தாக, அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 395 மற்றும் அதனுடன் வாசிக்கப்பட்ட குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 397 ஆகியவற்றின் கீழ் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.

அவ்விருவரும் தலா 20,000 ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிப்பதோடு, ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கின் மறு செவிமடுப்பு வரும் டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)