உலகம்

2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் பிலிப்பைன்ஸ்சில் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கை 215,400 ஆக அதிகரிக்கும்

02/12/2024 06:25 PM

மணிலா, 02 டிசம்பர் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள்  பிலிப்பைன்ஸ்சில் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கை 215,400 ஆக அதிகரிக்கும் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை நேற்று அறிவித்தது.

அந்த எண்ணிக்கையில், 131,335 சம்பவங்கள், உறுதிசெய்யப்பட்ட எச்.ஐ.வி சம்பவங்கள் என்று அத்துறை கூறியது.

உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், 2030-ஆம் ஆண்டில், அந்நாட்டில் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 448,000 பேராக அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறை கணித்திருக்கிறது.

எச்.ஐ.வி நோய் சம்பவங்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, பிலிப்பைன்ஸின் தேசிய எய்ட்ஸ் மன்றத்துடன் இணைந்து செயல்படவிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்தது.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், உள்ளூர் சிகிச்சையகங்கள், சுகாதார மையங்கள் மற்றும் நடமாடும் பரிசோதனை முகப்புகளில் வழக்கமான மருத்துவ பரிசோதனையை அவ்வப்போது மேற்கொள்ளும் படி பொதுமக்களை அத்துறை அறிவுறுத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)