அமெரிக்கா, 01 மார்ச் (பெர்னாமா) -- ரஷ்ய - உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா அதிபர் டொனல்ட் டிரம்ப் - உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த சந்திப்பு வாக்குவாதத்தில் முடிவடைந்திருக்கின்றது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த இச்சந்திப்பு, உலக ரீதியில் கவனம் பெற்றிருந்த வேளையில், ஆரம்பத்தில் சுமூகமாக தொடங்கி பின்னர் வாக்குவாதமாகி தோல்வியில் முடிந்துள்ளது.
உக்ரேன்-ரஷ்யாவுக்கும் இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் வேளையில், அதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.
முன்னதாக, அவர் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடன் தொலைபேசி வழி பேச்சு வார்த்தை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்கா வந்த வோலோடிமிர் செலன்ஸ்கியை வரவேற்று டிரம்பும், துணை அதிபர் ஜேடி வன்சும் இணைந்து சந்திப்பு நடத்தினர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது படையெடுக்க உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்கா சேரக்கூடாது என்பது செலன்ஸ்கி விரும்பினார்.
ஆனால், அந்த உரையாடல் பின்னர் மாறி மாறி சாடும் நிலைக்கு வைந்தபோது, அதிபரும் துணை அதிபரும் செலன்ஸ்கியை கண்டிக்கும் விதமாக பேசினர்.
''இந்த போரைப் பற்றி நீங்கள் சத்தமாக பேச முடியும் என்று நினைக்கின்றீர்களா?'', என்று செலன்ஸ்கி கேள்வி எழுப்பினார்.
"அவர் சத்தமாகப் பேசவில்லை, சத்தமாகப் பேசவில்லை. உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது", என்று டிரம்ப் கூறினார்.
''நான் பதில் சொல்லவா?'', என்று செலன்ஸ்கி கேட்டார்.
''இல்லை, இல்லை. நீங்க நிறைய பேசிவிட்டீர்கள். உங்க நாடு பெரிய பிரச்சனையில இருக்கின்றது'', என்று டிரம்ப் கூறினார்.
''எனக்குத் தெரியும், தெரியும்'', என்றார் செலன்ஸ்கி.
"நீங்கள் வெற்றிப் பெறவில்லை, இதில் நீங்கள் வெல்லவில்லை", என்றார் டிரம்ப்.
இந்த வாக்குவாதத்தின் காரணமாக அமெரிக்கா - உக்ரேன் நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாக இருந்த முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து செலன்ஸ்கி அங்கிருந்து புறப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)