புத்ராஜெயா, 13 மார்ச் (பெர்னாமா) -- பொது சேவை துறை ஊழியர்கள், வீட்டில் இருந்து வேலை செய்யும் செயல்முறை குறித்த பரிந்துரையை, அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாக்காரும் பொது சேவை தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ வான் அஹமாட் டஹ்லான் அப்துல் அசிஸ்சும் ஆய்வு செய்வர்.
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிச் செய்யப்படும் என்று தொடர்பு அமைச்சரும், மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
'''சில விவகாரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, வீட்டில் இருந்து வேலை செய்யும் செயல்முறையை அரசாங்க தலைமைச் செயலாளரும், பொது சேவை துறை தலைமை இயக்குநரும் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இது பொது சேவை துறைக்கு. இவ்விவகாரத்தின் முடிவுகள் அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இறுதிச் செய்யப்படும்,'' என்றார் அவர்.
தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பல ஆசியான் நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க வீட்டிலிருந்து வேலை செய்வது ஆகிய நடவடிக்கைகள் அதில் அடங்கும் என்று ஃபஹ்மி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)