அமெரிக்கா, 01 மார்ச் (பெர்னாமா) -- இதனிடையே, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
உடனான சந்திப்புக்கு பின்னர், உக்ரேன் அதிபர் வொலடிமர் செலன்ஸ்கி, அந்நாட்டின் Fox News தொலைகாட்சியின் நேர்காணலில் கலந்து கொண்டார்.
அதில், அமெரிக்க அதிபரையும் அந்நாட்டு மக்களையும் தாம் பெரிதும் மதிப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
"இல்லை. நான் அந்த அதிபரை மதிக்கிறேன், அமெரிக்க மக்களையும் மதிக்கிறேன். எனக்குத் தெரியாது, நாம் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் ஏதாவது தவறு செய்தோமா என்று எனக்குத் தெரியவில்லை. அது எங்களுக்கு கடினமாக இருக்கும். அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன். அதனால்தான் எதிர்கால பேச்சுவார்த்தைகளைப் பற்றி பேசுகிறோம். உங்கள் ஆதரவு இல்லாமல் அது கடினமாக இருக்கும், ஆனால் நாங்கள் தோற்க முடியாது", என்று அவர் கூறினார்.
ரஷ்யாவுடனான போர் தொடர்பாக உலக ஊடகங்கள் முன் இரு தலைவர்களும் கருத்து வேறுபாட்டில் மோதிக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு இடையிலான சந்திப்பு தோல்வியில் முடிந்தது.
உக்ரேன் மீது படையெடுக்கும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கக்கூடாது என்பதை மையப்படுத்தி தாம் சந்திப்பை மேற்கொள்ள வந்ததாக செலன்ஸ்கி கூறினார்.
இதனிடையே, இரு தலைவர்களுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு அடுத்து சிறிது நேரத்திலேயே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் செலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமைதிக்கு நிலவுவதற்கு செலன்ஸ்கி தயாராக இல்லை என்று டிரம்ப் கூறியதை அடுத்து, ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் டிரம்பை நேரடியாக விமர்சிக்கவில்லை என்றாலும் உக்ரேனுக்கான தங்களது ஆதரவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)